My Life My Yoga Video Blogging Competition - A Prize Money Award Ceremony
கோலாலம்பூர், ஜூலை 16 – இந்திய பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், ஆயுஷ் அமைச்சகம் (Ministry of Ayush) மற்றும் இந்திய கலாச்சார உறவின் மையமும் இணைந்து வழங்கும் என் வாழ்வு என் யோகா வலைப்பதிவு காணொளி போட்டியில் ( My life My yoga Video Blogging Competition ) தேர்வான பதினான்கு நபர்களுக்கு நேற்று (15.07.20) மலேசியாவின் கோலாலம்பூரில் உள்ள இந்திய கலாச்சார மையத்தில் சன்மானத்தோடு சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் மலேசியாவிற்கான இந்திய தூதரகம் சார்பில், இணை தூதுவர் திருமதி அர்ச்சனா நாயர் அவர்களும், இந்திய கலாச்சார மையத்தின் இயக்குனர் திரு கே.அய்யனார் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பு செய்தனர்.
மலேசியாவில் மொத்தமாக 54 நபர்கள் கலந்து கொண்ட இந்த வலைப்பதிவு காணொளி போட்டியில், திரு.மனோஜ், திரு.சேகர், திரு.ஹேம்சந்த் ஆகிய மூவர் அடங்கிய குழுவால் பதினான்கு நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இவர்கள் தொழில்சார், வயது, மற்றும் இளைஞர்கள் பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்டு, முதல் பரிசாக 750 ரிங்கிட், இரண்டாம் பரிசாக 500 ரிங்கிட், மூன்றாம் பரிசாக 250 ரிங்கிட் சன்மானமாக சான்றிதழ்களுடன் பெற்றுக் கொண்டனர்.
தேர்ந்தெடுக்கப்பட்டு கௌரவிக்கப்பட்ட பதினான்கு நபர்களும் உலகளாவிய போட்டிக்கு செல்லவிருக்கிறார்கள் என்பதையும் மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம்.